Sunday, December 18, 2011

பறவைகளைத் தேடி

பறவைகளைத் தேடி………
நேற்று ஒரு எண்ணம். ”அழகர் கோவில் மலைக்கு சென்று அங்கு அப்படியே மரத்துல மாட்டிக்கிடக்குற பறவைகளோட படத்தையெல்ல்லாம் அள்ளிக்கிட்டு   வந்துரனும்னு”  நம்ம ராசி ரொம்ப நல்ல ராசி.   நம்ம படம் எடுக்க போறது “உப்பு வித்தா மழை வரும், மாவு வித்தா காத்து அடிக்கும்ங்ற மாதிரி” தான். சரி முன் வைத்த காலை பின் வைக்க கூடாதுங்ற மாதிரி  பொட்டிய பைல பொட்டுக்கிட்டு கிளம்பிட்டேன். “இன்னைக்கு பாரு  எத்தனை படம் எடுக்கப்போற நீ” அப்டினு என்னை நானே சிலாகிச்சுக்கிட்டு  பஸ்ல ஏறி போய்  இறங்குனப்பவே மத்தியானத்துக்கு  மேல ஆய்ருச்சு. 
ரொம்ப வருஷத்துக்கப்புறம் போனதால அந்த ஏரியாவுல  ஏற்பட்ட மாத்தங்களையெல்லாம்  பாத்து வியந்துகொண்டே போனேன். அப்பன்திருப்பதில இருக்கும் போது மாசம் ஒரு தடவை அல்லது ரெண்டு மாசத்துக்கு ஒரு ட்ரிப்பு  ரெண்டு மூணு குடும்பம் மொத்தமா கட்டுசாதம் கட்டிக்கிட்டு இட்லி மாவு எல்லாம் அரைச்சு எடுத்துக்கிட்டு நடந்தே  அழகர் கோயிலுக்கு போய்ட்டு வருவோம். அப்ப சின்ன ரோடத்தான் இருக்கும். எப்பவாவது ஒரு பஸ்ஸு, ”சொக்கன் ட்ரான்ஸ்போர்ட்டோ ”அல்லது ”வேல்முருகனோ” வரும். சைக்கிள்ள ஒன்னு ரெண்டு பேர் போய்ட்டு இருப்பாங்க. இப்ப மாரி ட்ராபிக் எல்லாம் கிடையாது.  கள்ளந்திரி தாண்டுற வரைக்கும்  ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பச்சப் பசேல்னு நெல்லு நட்ருப்பாங்க அவ்வளவு நல்லாருக்கும் பாக்றதுக்கு.  பொய்யக்கரைப்பட்டி தாண்டுனா ஒரே  புஞ்சைக்காடு  தான். ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வரிசையா ஆலமரமா இருக்கும் ஏகப்பட்ட குரங்குகளும் இருக்கும். பொய்யக்கரைப்பட்டி வரைக்கும் அவுங்க ராச்சியந்தான். அப்படியே அதுககிட்ட வம்பிழுத்துக்கிட்டே  அதுகளுக்கு சாப்ட எதையச்சும் போட்டுக்கிட்டே போனா கண்ணு மூடி கண்ணு திறக்குறதுக்குள்ள கோயில் வந்த மாதிரி தெரியும். 

அப்ப மலைல ரோடெல்லாம் போடல. நடந்தேதான் தீர்த்தத்தொட்டிவரைக்கும் போகணும்.  கோயிலைத்தாண்டி மலைல போறதுக்கு ஒரு சின்ன வழி இருக்கும் அதைத்தாண்டுனதும்  நிறைய குரங்குகள் இருக்கும் “(ஆ) சாமிகளா இருப்பாங்க…திருவோட்டோட..  வாவி…  மாடுகளோட மணிச்சத்தம்,  மாடுகள்னு   ஆத்மாவோட  இருக்கும். நந்தவனம் இருக்கும் பூச்செடிகள் இருக்கும் அங்க ஒரு நெல்லிக்கா மரமும் இருக்கும். எங்கயோ காச்சிருக்குற அந்த சில  நெல்லிக்காய்கள  பறிச்சு திங்கற சுகமே தனி தான்…
ஆளும் பேரும் அதுலயே நடக்குறதால போறபாதை வழு வழுனு தேய்ஞ்சு போயி “பாதையா” இருக்கும்.  தீர்த்தத்தொட்டிலருந்து அப்புறம் மத்த எடங்கள்ளருந்து வர்ற தண்ணி யெல்லாம் பாதையோரத்திலேயே நம்மள தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கும். நல்லா குளு குளுன்னு நடக்கவே சொகமா இருக்கும். பழமுதிர் சோலைல தான் காலை சாப்பாடு. எல்லோரும் போய் விறகு பொறுக்கிட்டு வந்து கொடுக்க அம்மா மார்களெல்லாம் அடுப்பு பத்தவச்சு சமைக்க ஆரம்பிசுடுவாங்க. நாங்க கண்ணாமூச்சி, ஆராய்ச்சினு இறங்கிருவோம். என்ன ஒரு  சுகமான வாழ்க்கை அனுபவம்….. ம்.. நேத்து நான்  பாத்தது ஆத்மாவை இழந்துக்கிட்டு இருக்கிற ஒரு இடம் கோயில்லருந்து காட்டுக்குள்ள போற வழில உள்ள படிக்கட்டு ஏறுனதும்  குப்பைமேடு ..எச்சி எல மட்டை, ப்ளாஸ்டிக் அது இதுனு… “சாமிகளை” யே காணோம்.. குப்பைப் பாதை.. சிறைவைக்கப்பட்ட “வாவி” நந்தவனத்தைக்காணோம்.. மாடுகளையும், மணிச்சத்தத்தையும் காணோம்… நொந்துக்கிட்டே வாவியைத்தாண்டி போனா.. நான் மொத மொதலா பார்க்குற அழகான ஒரு பறவை… சரி இன்னும் இதுபோல எத்தனையோனு மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக்கிட்டு அதை ஒரு படம் எடுத்துத்தேன்  அது தான்  இது….
நானும்   அப்புறம்  ஒரு நாலஞ்சு பேர் மாத்திரந்தான் அந்த வழியா நடந்து போனோம்..  எங்களப்பாத்து  அந்த பறவை பறந்து போனப்புறம் பாத்தா, ஒரு பறவை கூட  கண்ணுக்கு ஆப்படல முன்னாடில்லாம் நிறைய வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் ஆனா என் கண்ணு முன்னாடி  ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்து வந்து மண்ணுல உக்காந்துச்சு அதையும் ஒரு படம் எடுத்துட்டு மேல நடந்தேன். அது இது….
போற வழில  பாதையோரமவே வர்ற தண்ணியெல்லாம் ஒரு சின்ன நீர் வீழ்ச்சி ஒண்ணா உருவாகிருந்துச்சு அது இது..

கொஞ்ச தூரத்தில அந்த மலைப்பாதை  மலைமேல் போற தார் ரோட்டோட போய் சேர்ந்துச்சு. அங்க ஐஸ், சோளக் கருது, கிளாக்காய், அன்னாசிப்பழம்  கடலை, மிட்டாயினு எல்லாம் ரோட்டோரக்கடைகள்ள விக்கிறாங்க.  

நானும் ஒரு சோளக்கருத வாங்கி கொறிச்சுக்கிட்டே அந்த கடைகளைச்சுற்றித்திரிந்த குரங்குகளை நோட்டம் விட்டபடி இருந்தேன்.அப்பத்தான் அந்த ஒத்தக்கையனைப் பார்த்தேன்.
அந்த கடைக்காரம்மாவிடம் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து தெரியவந்தது என்னனா போறவர்ற வண்டி வாசிகள்ள  அடிபட்டு நெதம் ஒரு குரங்கு  முடமாகுது இல்லைனா சாகுது. ஏன்னா போற வர்ற வண்டிகள்ளருந்து ரோட்டோரமாவும் ரோட்டுலயும் போடற தீனிகளால ரோட்டுல வந்து இரை தின்னுகிட்டு இருக்கிற குரங்குகள்  கண் ணு மண்ணு தெரியாம போற வாகனங்கள்ள அடிபடுதுக.சொன்னமாதிரியே குரங்குகள்ளாம் ரோட்டோரத்திலயே  நின்னுக்கிட்டிருக்குதுக.
அந்தம்மா சொன்ன இன்னொரு விஷயம் ரொம்பவே சங்டப்படுத்துச்சு. ஒரு குரங்கு மாறுகால் மாறு கையில்லாம  நடமாடிதிரியுதுன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணா பார்க்கலாமுன்னும் சொன்னாங்க  அந்த மனத்தகிரியம் இல்லாததுனால நான் அங்கருந்து எடத்த காலி பண்ணேன். என்ன செய்யறது இந்த மனுசப்பயலுகளா பார்த்து திருந்தாட்டி இவுங்கள காப்பத்துறது கஷ்டம் தான். தானா இரை தேடிக்கிட்டு தன் காட்டுல சுதந்திரமா சுத்திக்கிட்டிருந்த குரங்குகள இலவச தீனிகளப்போட்டு தன்னை மாதிரியே சோம்பேறி ”தமிழ் குரங்குகளா” மாத்தினதும் இந்த மனுஷங்கதான். 
சரி பறவைகளைப் படமெடுக்கப்போயி குரங்குகளைப்பத்தியே பேசிக்கிட்டுருக்கானேனு பாக்கறீங்களா? என்ன செய்ய? மருந்துக்கு கூட ஆப்படலைனு சொல்லுவாங்கள்ள அது தான் நடந்தது இதுவரைக்கும். சரி பழமுதிர் சோலைக்குப்போனா அங்கதான் பழமிருக்கே பறவைகள் இல்லாமலா போகும்னு ஒரு நம்பிக்கையோட மேல நடந்தேன் வழில  ஒன்னு ரெண்டு பேரைத்தவிர  யாருமே நடக்கல.
போற வழில கருட தீர்த்தம்னு ஒன்னு இருக்குனு தெரியும் சரி அங்க போனாலாவது ஏதாச்சும் பறவைகள பார்க்கலாம்னு போனேன். ”கருட”தீர்த்தம்ல…. ஆனா அங்கயும் மிஞ்சுனது ஏமாத்தந்தான்..சரி ரெண்டு படம் எடுத்துக்குவம்னு  படம் எடுத்துக்கிட்டேன். பொதுவா நான் பார்த்த எடத்திலெல்லாம் எல தழைகளுக்கு சமமா எங்க பாத்தாலும் பிளாஸ்டிக் பேப்பர்கள்தான்.  இந்த மாதிரி எடங்கள்ள தண்ணி எங்கருந்து வருது, அவ்ளோ ஒசரத்துல மல மேல எப்படி வருது, அத அந்தக்காலத்துல எப்படி ஒரு தொட்டிய கட்டி  திருப்பி விட்டு பம்புசெட்ல வர்றமாதிரி பண்ணியிருக்கங்கன்னு  ஆச்சிரியமாத்தான் இருக்கு. ஆச்சரியப்படறதோட நிறுத்தாம அந்த இடங்கள எவ்வளவு அசுத்தப்படுத்தியும் வச்சுருக்கோம்கறத பாக்குறப்போ அதவிட ஆச்சிரியமா இருக்கு, அதிர்ச்சியா இருக்கு…

சரிபழமுதிர் சோலை கை கொடுக்கும்ங்கறத மறுபடியும் மனசுல நினச்சுக்கிட்டு அங்கருந்து நடந்தேன். வழில மரத்துல ஒரு குரங்கு எதையோ பறிகொடுத்தது போல பாத்துகிட்ருந்துச்சு அப்புறம் என்ன நினச்சுதோ தெரியல மர உச்சிக்கு போய் சோகமா படுத்துருச்சு.
சோகம் தெரியுதா??
 

போற வழிலயும்  ஒரு பறவையையும்  பாக்க முடியல . பறவயத்தான் பாக்க முடியல வேற ஏதாவது பறக்குதானு பாத்தப்போ அங்க ஒரு கொளவிக்கூட்டமே பறந்துக்கிட்ருந்துச்சு. என் குருநாதர் ஒருதடவை, எங்கிட்ட  சே! என்னமா ஒருத்தன் பறக்குற பட்டாம் பூச்சிய படம் எடுத்திருக்கான்னு சொன்னது நாபகம் வந்துச்சு. சரி நம்மளும் ட்ரை பண்ணுவோம்னு 38 தடவ எடுத்ததுல இது ஒண்ணு தான் இவ்வளவாவது தேறுச்சு. அது  இது.
கொளவியப்படமெடுக்கைல  ஏதோவொரு காலேஜுப்பசங்க கூட்டமா போறப்ப  எனக்கு கொலவெறி வர்ற மாரி ஒருத்தன் அடிச்ச கமெண்ட்..இங்க பார்றா . ”மயக்கமென்ன”டான்னான்…. என்னெனமோ சொன்னான் கவனம் கொளவில  இருந்ததால  சரி போங்கடானுட்டு  நொந்துக்கிட்டே  மிச்சப் படங்களையும் எடுத்து முடிச்சிட்டு அங்கருந்து நகந்தேன்.

ஒரு வழியா பழமுதிர் சோலைக்கு போனா அங்க நான்  சின்னப்பிள்ளல பார்த்த சோலைகளையும் காணோம் பழம் உதிரவும் காணோம்.. பறவைகளையும் காணோம்.சரி தீத்தத் தொட்டிக்கு போனாலாவது பறவைகள் கிடைக்க  சான்ஸ் இருக்குனு அங்க நடையக் கட்டினேன். கீழ, வாவில காணமல்போன் “சாமி”களை அங்க பார்த்தேன். ஒரு மலயாள சாமியும்  நம்ம தமிழ் நாட்டு சாமியும் ”ஒத்துமையா” பக்கத்துல பக்கத்துல உக்க்காந்து, எப்படி கேரளாவுல ஐயப்பசாமி சீசன்ல இவுங்க  சாமி கெட்டப்ல பிச்சை எடுக்கறது எடுபடல அங்க எவ்வளவு கெடுபிடினு  தீவிரமா சம்சாரிச்சுக்கிட்டிருந்தங்க..மேல போறப்ப யாரையும்  தொந்தரவு பண்ணவே இல்ல. ஆனா  கீழ வர்றப்ப பாக்கணும் ஒரு ஆளை விடலையே.. ஓரு சாமி பக்திப்பரவசமா மயிலிறகை வச்சு தடவி ஆண்டவன் அருள் பாலிக்க என்னமோ சொன்னாரு ஆனா ”உற்சாகமா” இருந்தாரு.. எப்படித்தான் அவருக்கு கூட மக்கள் “தருமஞ்”செய்யராங்களோ தெரியல.
அங்கயும் ஒரு பறவையையும் பாக்க முடியல. சரி  தீர்த்தத் தொட்டிக்கும் மேல் போனாலாவது ஏதாவது கண்ல தட்டுப்படுமானு  நினச்சுக்கிட்டே மேல போக ஆரம்பிச்சேன்.
பாதை நான் என் சின்ன வயசுல பார்த்த பாதையில்லை. அதுக்கு என்னைவிட வயசாகிருந்துச்சு. எனக்கு முன்னால் “என் கொலவெறிக்கூட்டம் “ போய்ட்டிருந்துச்சு.  எனக்குத்தான் அந்த தனிமையை பாத்தவொடன  கொலவெறி போயி ஒரு  உள்ளூர பயம்னு சொல்லுவாங்களே அது வந்துருச்சு. அங்க ரெண்டு எடத்துல  சின்ன  நீரூத்து இருந்துச்சு அங்கயும் கொஞ்சப்பேரு குளிச்சுகிக்கிட்டுருந்தாங்க.  நான் அதையும் தாண்டி போய்கிட்டு இருந்தேன்.  யாருமே எனக்கு முன்னாடி இல்ல ..போய்கிட்டே இருந்தேன்  வடக்க போன பாதை  மேக்க மாறுச்சு . உள்ளூர ஊறி இருந்த பயமும்  கொஞ்சம் கொஞ்சமா வெளில வரத்தொடங்குச்சு. சரி இதுக்கு மேல் போறது சரியாகாதுனுட்டு திரும்பி வந்தவழிலயே நடக்க ஆரம்பிச்சேன். அப்பத்தான் ரெண்டு பேர் என்னத்தாண்டி வேகமா மலை மேல போக பாத்தாங்க விசாரிச்சப்போ வீட்டுக்குப்போறேன்னு சொன்னாங்க..ஷார்ட்கட்ல போறாங்கலாம். கூடப்போகணும்னு ஆசைதான் ஆனா, காடு போ போனுச்சு வீடு வா வானுச்சு. நெசந்தாங்க. திடீர்னு என் செல்ஃபோன் அடிக்க ஆரம்பிச்சுச்சு. அவ்வளவு அத்துவானக்காட்டுல தாங்க… எதிர்முனைல தங்கமணி… அப்புறம் என்ன பறவையை படம் எடுக்கப்போயி  ஒரே ஒரு பறவையை மட்டும் படம் எடுத்துட்டு வந்த  என் சோகக் கதை இதாங்க.
அங்க போய்ட்டு வந்தப்புறம் என் மனசுல சில விஷயங்கள் ஓடிட்டு இருக்கு..
1.இந்த குரங்குகளுக்கு எதுவும் செய்யமுடியாதா?
2.இங்க இருக்கிற ப்ளாஸ்டிக் குப்பைகளை அகற்ற எதுவும் செய்யமுடியாதா?
3. இந்த மாசு பட்ட சூழ்நிலையை மீட்டெடுக்க  ஏதும் செய்யமுடியாதா?
மதுரைல எத்தனை காலேஜ்ல விலங்கியலும்,தாவர இயலும் சொல்லித்தருகிறார்கள் செமஸ்டருக்கு ரெண்டு களப் பயணம் (மதிப்பெண்ணுடன்) அழகர் கோவில் மலையின் சூழ்நிலையை மீட்டெடுக்கும்… நான் ரெடி.. காலேஜை விட்டுவிடுங்கள் பத்து பேர் ஒத்தகருத்துடையவர்கள்  வந்தால் போதும்  10 சதவீதம் ப்ளாஸ்டிக்கை அகற்றினாலே போதும், மக்கள் மாறுவார்கள். குப்பை போடுவதை நிறுத்துவார்கள். 

 

1 comment:

 1. முதல் படத்திலிருக்கும் பறவையை நானும் பார்த்ததில்லை.

  இதேபோல் பறவை பிடிக்க பெங்களூர் ஹெப்பால் ஏரிப்பக்கம் போய் ஒரேயொரு (பாறை மேல் தவமிருந்த) பறவையை மட்டும் பிடித்துவிட்டு, மனக்குறையைப் போக்கிக் கொள்ள பூங்காவிலிருந்த பூக்களையெல்லாம் பிடித்துத் திரும்பிய அனுபவம் உண்டு.

  இங்குள்ள நந்தி ஹில்ஸிலும் இப்படிதான் குரங்குகள் போகிற வாகனங்களைச் சூழ்ந்து கொள்ளும்.அவற்றை வேடிக்கை பார்க்க ஏதேனும் கொறிக்கப் போட்டுவிட்டு காருக்குள் இருப்பார்கள் சனங்கள். ’இலவசத் தீனி’க்கு ஆசைப்பட்டே கார்களில் விழுந்து காயப்படுகின்றன போலும்:(!

  நல்ல பகிர்வு.

  பிளாஸ்டிக் எங்கும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.

  ReplyDelete